Sunday, 24 November 2019

ஸ்ரீ திண்ணை சுவாமிகள்

ஸ்ரீ திண்ணை சுவாமிகள்

6 டிசம்பர் 2003. கார்த்திகை தீப தரிசன நாள். அதிகாலை நேரம். பகவான் ரமணரின் அதிசிறந்த அடியவருள் ஒருவர் தன் ஊன் உடலை அருணையில் நீத்தார். வெளி உலகத்தின் பார்வையில் படாது ஒதுங்கி வாழ்ந்தார். பகவான் ஸ்ரீ ரமணரின் அருளால் ஆத்ம ஞானம் அடைந்தவர். ஆத்ம ஞானம் போதத்திலேயே 54 ஆண்டுகள் திருவண்ணாமலையில்  வாழ்ந்து வந்தார்.

அவரைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது. அவர் காலத்தைச் சேர்ந்த அடியவர்கள் கூட அவரை நன்கு அறிந்திலர். இதற்குக் காரணம் பகவானின் திருவுள்ளம் என்றே கொள்ளவேண்டும். குறைவுபட்ட நம் அறிவாற்றலால் அத்திருவருளின் தன்மையை ஊகிக்க இயலாது. தன்னை அழித்து வாழ்ந்தவர் இவ்வடியார் ; சுயவிருப்பம் முற்றிலும் அற்றவர். மற்றவரின் பார்வையில் குறைந்த அளவே படுமாறு வாழும் சூழ்நிலையை அவர் தெரிந்தெடுத்துக் கொண்டதுபோல் தோன்றுகின்றது. அவரை நன்கு தெரிந்திருந்த சிலரும் அவருடைய இத்தேர்வினை மதித்து அவரை உலகிற்குத் தெரியப்படுத்தினாரில்லை.

இப்பொழுது அவர் தம் ஸ்தூலவுடலைக் களைந்து விட்டார். ஆதலால் அவரைப் பற்றி தெரிந்து வைத்துள்ள குறைந்த சில செய்திகளை மற்ற அடியவர்களுடன் பகிர்ந்து கொள்வது தவறில்லை.

பூர்வாசிரமத்தில் இவ்வடியவர் பெயர் ராமஸ்வாமி என்பது. ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திண்ணை சுவாமிகள் ( பெஞ்ச் சுவாமிகள் ) என்றே மற்றவருக்கு அறிமுகமானவர். இதற்குக் காரணம் அவர் ஒரு வீட்டின் திண்ணையிலேயே , அத்திண்ணையை விட்டு அகலாமல் , பல ஆண்டுகாலம் இருந்து வந்ததே. இவ்வளவு ஆண்டு காலத்திலும் எப்பொழுதாவது ஓரிரு முறை திண்ணையைவிட்டு வெளியே சென்று திரும்பி இருக்கலாம். அவ்வீடு மறைந்த திரு. C.P. நாதன் அவர்களின் குடும்பத்தினருக்குச் சொந்தமானது. இடமும் , உணவும் கொடுத்து அவருடைய உடல் பராமரிப்பிற்கான மிகக் குறைந்த தேவைகளையும் நிறைவேற்றித் தந்து வந்தனர் C.P. நாதனும் அவருடைய குடும்பத்தினரும்.

12 டிசம்பர் 1912 அன்று கோயம்பத்தூரில் வழக்குரைஞர்களும் , மருத்துவர்களும் நிரம்பப் பெற்ற தெலுங்கு பிராமண குடும்பத்தில் திண்ணை சுவாமிகள் பிறந்தார். இளம்  வயதில் பல ஆண்டுகள் சென்னை மருத்துவக் கல்லூரியில் (MADRAS MEDICAL COLLEGE) உயிரியல் வேதியராகப் (BIO – CHEMIST) பணியாற்றி வந்துள்ளார். அக்கால கட்டத்தில் அவருக்குத் திருமணம் ஆகி தம் மனைவியுடனும் , நான்கு குழந்தைகளுடனும் வாழ்ந்து வந்தார். முப்பத்தைந்து வயதை ஒட்டிய காலம் வரை அவர் வாழ்வில் நிகழவிருந்த அகம் , புறம் தழுவிய பெருமாற்றங்கள் குறித்த அறிகுறி ஏதும் அவருடைய புறவாழ்க்கையில் காணப்படவில்லை.

முதல் முறையாக பகவானின் தரிசனம் வேண்டி திருவண்ணாமலைக்கு அவர் வந்தது 1947 ல் இருக்கலாம். குறுகிய  கால அளவே நிகழ்ந்த இம்முதல் சந்திப்பு அவருடைய புற வாழ்க்கையில் உடனுக்குடனே எவ்வித மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. 1947ம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் அவருடைய புறவாழ்வு மாறத் தொடங்கியதற்கான அறிகுறி தென்பட்டது. அப்பொழுது மேற்படிப்பிற்காகவும் , ஆய்விற்காகவும் அமெரிக்காவிற்குச் செல்ல அவருடைய துறையிலிருந்து ஒருவர் தேர்ந்துதெடுக்கப்பட இருந்தார். முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவரே. ஆனால் விரைவிலேயே அத்தேர்வு திருத்தப்பட்டு ,  அவருக்குப் பதிலாக பணியில் இளையவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் செல்வாக்கின் காரணமாக இவ்வநியாயமான மாற்றம். நடந்திருக்கிறது என்று அறிந்த அவர் கொள்கை அடிப்படையில் தன் பதவியைத் துறந்தார். வேறு ஒரு வேலை தேடுவதற்கு முன்பாக , பகவானின் சன்னிதியில் மேலும் சில காலம் இருக்க விரும்புவதாக அவர் தன் மனைவியிடம் கூறினார். இவ்வாறு திருவண்ணாமலைக்கு இரண்டாவது முறை அவர் வந்தார். உடனேயே தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் அங்கே அதிககாலம் தங்க உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மாத்ருபூதேஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அது முடிந்தவுடன் மனைவியையும் , குழந்தைகளையும் அங்கே கூட்டி வந்துவிட வேண்டும். அதற்குள் அவர்கள் தங்க ஏற்ற இடம் கிடைத்துவிடும் என்று மேலும் தெரிவித்திருந்தார். அதன்படியே அவர் குடும்பத்தினரும் அவரோடு இணைந்து , அவ்வாண்டு ஜீலை மாதம் வரை இருந்து வந்தனர். அக்கால கட்டத்தில் நான்காவது குழந்தையின் பிறப்பிற்காக அவரது மாமனாரின் வீட்டிற்கு அனுப்பினார். அவரது மனைவி செல்வதற்கு முன் அவரிடம் பாண்டிச்சேரியில் தகுதியான வேலை ஒன்று இருப்பதாகவும் , உடனே அங்குச் செல்லப்போவதாகவும் கூறினார்.

திருவண்ணாமலையில் குடும்பத்தினருடன் இருந்த அச்சில மாதங்களில் பெரும்பாலான நேரம் அவர் பகவான் சன்னிதியில் இருப்பார் , அல்லது கிரிவலம் வந்து கொண்டிருப்பார். அச்சமயம் முருகனாரிடம் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாகத் தெரிகின்றது. அவருள்ளே நிகழ்ந்து வரும் அகமாற்றத்தைக் காட்டும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு நாள் மதிய உணவிற்கு வழக்கத்திற்கு மாறாக மிகவும் தாமதமாக வந்தார். அப்பொழுது அவரது தாயார் அவரிடம் , “ பகவானை பார்க்கச் சென்றிருந்தாயா ? ” என்று வினவ , அவர் “ சும்மா சுவாமியைப் பார்ப்பதில் என்ன பயன் ? நாமும் சுவாமி ஆக வேண்டும் , ” என விடை பகிர்ந்தார்.

அவருடைய குடும்பத்தினர் சென்ற பிறகு , ஒரு நாள் அவர் பகவானிடம் வேலைக்கு விண்ணப்பத்திற்காக பாண்டிச்சேரி செல்வதற்கு அனுமதி கேட்டார். அதற்கு பகவான் , “ இரு ” என்று குறிக்குமாயினும் , இந்தச் சூழ்நிலையில் “ தங்கி இரு , ” “ பொறுத்திரு ” என்று பொருள் தருவதாக அமையும். யாராவது பகவானிடம் விடைபெற்றுச் செல்ல வந்தால். அவர்களை தங்கி இருக்குமாறு பகவான் சொல்வது வழக்கமில்லை என்றாலும் , அந்நேரம் அங்கிருந்த அடியவர்களில் பலர் இதனை கவனிக்கவில்லை. ஆயினும் , அவ்வடியவருள் ஒருவராயிருந்த முருகனார் பகவான் மொழிந்த அவ்வொரு சொல்லின் ஆற்றலை உணர்ந்தார் ; அது திண்ணை சுவாமிகளை எவ்வளவு ஆழமாகப் பாதித்தது என்பதனையும் உணர்ந்தார்.

பகவான் சொன்ன “ இரு ” என்னும் சொல்லுக்கும் , அதன் இரு பொருளுக்கும் திண்ணை சுவாமி கீழ்ப்படிந்தார். அத்தருணத்திலிருந்து திருவண்ணாமலை விட்டு ஒரு போதும் அவர் நீங்கவில்லை. அடுத்து , அழிவில்லாத பேரின்பமாகிய சொரூப நிஷ்டையில் வலுவாக ஊன்றிவிட்டார். “ ‘ சும்மா இரு ’  என்னும் இரு வார்த்தைகளால் முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு ஞானம் அருளினார் , பகவானோ ‘ இரு ’ என்னும் ஒரு சொல் சொல்லி திண்ணை சுவாமிகளுக்கு ஞானம் அருளினார் ” என்று சாது ஓம் கூறுவார்.

திண்ணை சுவாமிகளின் அகவாழ்வில் ஏற்பட்ட அவரது புறவாழ்வில் முழுமையானதும் , பெரிதுமான ஒரு மாற்றத்தை தோற்றுவித்தது. அந்த நாளிலிருந்து அவரது புறமுகச் செயல்பாடுகளில் அடிப்படை மாற்றம் நிகழ்ந்தது. அவர் இயல்பாகப் பேசுவது நின்றது. எப்பொழுதாவது தான் அவர் பேசினார். அப்படிப் பேசினாலும் அவரது வார்த்தைகள் புதிராகவே இருந்தன ; பல சமயம் ஆன்மிகம் தழுவிய மாற்றுப் பொருளற்றவையாகவும் தோன்றின. அவர் தம் தோற்றத்தைப் பற்றிக் கவலைப்படாதவரானார் ; அவருடைய தலைமுடி நீண்டு வளர்ந்து சடைபிடித்துப் போனது. பிச்சையெடுத்து உண்டார் ; வழக்கமாக ஒரு வேளை உணவுதான் ; சில சமயம் அவர் அகமுகமாகி நிஷ்டையில் பல நாட்கள் ஒடுங்கிவிடுவது உண்டு என்று அறிந்தவர் சொல்வர். அப்பொழுது உண்பதற்கோ , தேகசுத்திக்கோ அவர் அசைந்தது கிடையாது.

சிறிது காலமாக அவரிடம் செய்தி ஏதும் வராத காரணத்தால் அவருடைய குடும்பத்தினர் கவலையடைந்தனர். ஆதலால் அவருடைய மைத்துனர் அவருக்கு என்ன நிகழ்ந்து விட்டது என்ற அறிய திருவண்ணாமலை வந்தார். கடைசியாக அவரைக் கண்டுபிடித்த பொழுது அவர் முற்றிலும் மாறியிருந்ததை அறிந்து கொண்டார். வீட்டிற்குத் திரும்பி வரும்படி வேண்டிக் கொண்ட பொழுது. அவர் எவ்விதமான பதிலையும் தராது இருந்ததையும் கண்டார். இதன் காரணமாக அவர் மனநலம் கெட்டுவிட்டது என்று முடிவு செய்தார். ஆனால் அவருடைய மனைவி இதை நம்பவில்லை. அவரைப் பார்க்கத் தன்னை அழைத்துச் செல்லும்படி தன் தந்தையிடம் வேண்டினார். கடைசியாக பகவானின் மகா நிர்வாணித்திற்குப் பிறகு அவர்கள் திருவண்ணாமலை வந்து சேர்ந்தனர். அவரை வீடு திரும்ப பலமுறை வேண்டியும் , அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதைக் கண்ணுற்று அவருடைய மனைவியார் தன் தந்தையிடம் பின்வருமாறு கூறினார் : “ அவர் இப்படியே வாழ விரும்பினால் அவரது விருப்பத்திற்குக் குறுக்கே நான் நிற்க விரும்பவில்லை. ஆனால் அவரது மனைவி என்கின்ற முறையில் அவருக்குப் பணிவிடை செய்ய எனக்குக் கடமையும் , உரிமையும் உண்டு. ஆகவே அவரைப் பார்த்துக் கொள்ள இங்கேயே தங்கியிருக்க எனக்கு அனுமதி தாருங்கள். ” தந்தையார் அதற்கு இணங்கி ஆஸ்ரமத்து குருக்களாகிய கிட்டு அய்யர் வளாகத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி மனைவி , மகள் , இளைய மகன்கள் இருவரும் தங்க ஏற்பாடு செய்தார்.

தன் மனைவியும் மாமனாரும் கேட்டுக் கொண்டதன் பேரில் திண்ணை சுவாமிகள் தன் மனைவியின் பணிவிடையை ஏற்றுக் கொள்ள இசைந்தார். அவர்களுக்கு அருகாமையிலேயே ஒரு குடிசையில் சில காலம் வாழ்ந்து வந்தார். அக் காலகட்டத்தில் பெரும்பான்மையான நேரம் ஆத்ம நிஷ்டையில் ஆழ்ந்துவிடுவார் ; உணவிற்கோ கிரிவலம் வருவதற்கோ மட்டுமே நிஷ்டையிலிருந்து வெளிவருவார். சிறிது காலம் சென்ற பின்னர் அவரது மாமனார் அவருடைய மனைவியை அவருடைய மூத்த மகன்களுடன் சேர்ந்து இருப்பதற்காக அழைத்தார். அவர் மனைவி அதனை முதலில் மறுத்தாலும் , அவருடைய கடமை என்றி திண்ணை சுவாமிகள் கூறியதனால் தந்தையிடமே திரும்பினார். பின்னர் திண்ணை சுவாமிகள் விரூபாக்ஷ குகைக்குத் திரும்பிச் சென்று அங்கே தங்கி வரலானார். வழக்கம் போல் பெரும்பாலான நேரம் ஆத்ம நிஷ்டையிலே இருந்து வரலானார். பல நாட்களாக , கிரிவலம் வருவதற்கும் , வழியிலே உணவைப் பிக்ஷையாகப் பெறுவதற்கும் மட்டுமே நிஷ்டை கலைந்து எழுவது வழக்கம் ஆயிற்று.

முதலில் நகரில் உள்ள வீடுகளில் எங்காவது பிக்ஷை எடுத்து வந்த நாளடைவில் ஸ்ரீ ரமண நகரில் உள்ள ஒரு சில வீடுகளில் மட்டுமே பிக்ஷை எடுப்பதெனக் குறுக்கிக் கொண்டார். காலப்போக்கில் தான் உண்ணும் ஒரே வேளை உணவிற்காக திரு. C.P. நாதன் வீட்டிற்கு மட்டுமே பல நாட்கள் வந்தார். 1950 ன் இறுதிகட்டத்தின் ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு வந்தபொழுது திருமதி. C.P. நாதன் அவர்களிடம் , “ அம்மா வெளியிலே மழை பெய்கிறது. நான் இங்கே ஒதுங்கிக் கொள்ளலாமா ? ” என்று கேட்டார். “ சுவாமி , இது உங்கள் வீடு. நீங்கள் தாராளமாக இங்கே தங்கலாம் , ” என்று அவர்கள் கூறினார்கள். அன்று அவர்கள் வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தவர் அங்கேயே இருந்து விட்டார்.

அது புரட்டாசி மாதத்தில் ஒரு நாள். அன்று நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. மழைக்கான அறிகுறியே இல்லை. இருந்தும் சிறிது நேரத்தில் சிறியதோர் கார்மேகம் தோன்றி மழைத்துளிகள் சில விழுந்தன. “ வெளியே மழைபெய்கிறது ” என்பதாக அவர் கூறியதன் உட்கருத்து , விருபாக்ஷ குகை போன்ற பொது இடத்தில் அவர் வசித்து வந்ததால் , வெளி உலகத்தினர் பலரின் பலவிதமான கவனிப்பிற்கு எவ்வித தேவையுமின்றி அவர் இலக்கானார் என்பதே. உலகியல் வாழ்வே பெரிதனெக் கொண்ட மனிதரும் கூட இவருடைய தோற்றம் , நடந்து கொள்ளும் விதம் இவற்றை கண்ணுற்று , இவர் ஒரு சாதாரண சாதுதான் என்று அலட்சியப்படுத்தவில்லை. பொதுமக்களின் கவனம் அவர்பால் ஈர்க்கப்பட்டது ; அவர்கள் அவரைப் போற்ற ஆரம்பித்தனர். இதனை அவர் தவிர்க்க விரும்பினார்.

அச்சமயம் திரு.C.P. நாதன் தன் குடும்பத்தினருடன் ஒரு வாடகை வீட்டில் இருந்துவந்தார். சிறிது காலமாக பக்கவாத நோயினால் தாக்குண்டு , செயல்பட முடியாமல் இருந்து வந்ததால் வீட்டிற்குத் தொடர்ந்து வாடகை கொடுத்துவர முடியாதவராகி , வேறு ஒரு இடம் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார். இச்சிரமத்தை திருமதி. நாதன் திண்ணை சுவாமிகளிடம் கூறிய பொழுது , அவர் பக்கத்திலிருந்த காலி இடத்தை காட்டி , “ நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் வீடு அங்கே கட்டப்படுகிறது , ” என்றார். கூடிய சீக்கிரம் , அக்காலி இடம் டேவிட் மெகாவருக்குச் சொந்தமானது என்றும் , 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நிலத்தை வாங்கிய அதே விலைக்கு அதனை விற்க இருக்கின்றார் என்றும் தெரியவந்தது. ஆனால் அவர்களிடம் இருந்த தொகையை வைத்து நிலத்தை மட்டுமே அவர்களால் வாங்க முடிந்தது. பணமில்லாத காரணத்தால் வீடு எப்படிக் கட்டுவது என்று சிந்திக்கக் கூட இயலாதவர்களானார்க. இதனை அவர்கள் திண்ணை சுவாமிகளிடம் கூறியபொழுது , அவர் அவர்களிடம் , “ மூன்று சாதுக்கள் உங்களுடைய வீட்டைக் கட்டுவார்கள் , ” என்றார். பின்னால் நண்பர்கள் கொடுத்த பணத்தைக் கொண்டும் , சாதுஓம் சுவாமி , தேசூர் ரமணானந்தா மடாலயத்தைச் சேர்ந்த சுவாமி சங்கரானந்தா , மேலும் சுவாமி கிருஷ்ணானந்தா என்றும் மூன்று சாதுக்களின் உதவியினாலும் ஒரு சிறிய வீடு அவர்களுக்குக் கட்டப்பட்டது. அதில் தென்னங்கீற்றுக்களால் ஆகிய வராண்டாவும் , அதில் திண்ணை சுவாமிகள் இருப்பதற்கான திண்ணையும் அமைந்தன.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திண்ணை சுவாமிகள் அத்திண்ணையிலேயே வசித்து வந்தார். எப்பொழுதாவது தான் அவர் அவ்வீட்டின் சுற்றுச் சுவரைத் தாண்டிச் சென்றார். 1976 ல் இருந்து 1996 முடிய நான் திருவண்ணாமலையில் இருந்த இருபதாண்டு காலத்தில் ஒரே ஒரு முறையே அவர் அவ்வீட்டின் சுற்றுச் சுவரைத் தாண்டிச் சென்றிருந்தார். 1970 ந் இறுதிக் கட்டத்தில் , ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு அவர் வெளியே சென்று , சுற்றுச் சுவருக்கும் அருணாசலத்திற்கும் இடைப்பட்ட வெட்ட வெளியில் மூன்று , நான்கு தினங்கள் குத்தலிட்டு உட்கார்ந்து இருந்தார்.

நான் திருவண்ணாமலையில் இருந்த ஆரம்பகாலத்தில் , அவர் திண்ணையை விட்டு இறங்குவது , தரையில் குத்தலிட்டு உட்கார்ந்து உணவு உண்பதற்கும் ,வெளியே இருந்த கழிப்பிடத்திற்குச் சென்று வருவதற்கு மட்டுமே. சிற்சில சமயங்களில் வெளியே இருந்த மேடையில் அருணாசலத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருப்பார். எப்பொழுதாவது சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்துள்ள வாயிற்கதவு வரை சென்று வருவார். இவை தவிர , எப்பொழுதும் அவருடைய திண்ணையிலேயே சாய்ந்தவாறு அமர்ந்திருப்பார். நான் திருவண்ணாமலைக்கு வருவதற்கு முந்திய காலத்தில் சில சமயங்களில் அவர் ரமணாஸ்ரமத்திற்கு அருகிலுள்ள பாலி தீர்த்தத்திற்குச் சென்று , அக்குளத்தில் சிறிது நேரம் மூழ்கிக் குளித்து , ஈரம் சொட்டும் மேலாடையுடன் உலரவிட்டுக் கொண்டே திரும்புவாராம். நான் அங்கிருந்த காலம் , ஒரு முறை வீட்டிற்குப் பின் உள்ள கிணற்றிற்குச் சென்று , சில வாளி தண்ணீர் எடுத்துத் தன் மேல் விட்டுக் கொண்டார். இவ்வாறு ஆகிய சில சமயங்களைத் தவிர்த்து அவர் குளித்தது இல்லை. ஆனால் அவருடைய உடல் எவ்வித துர்நாற்றமும் இன்றி இருந்தது.

அவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவை பல. சில நான் நேரில் கண்டவை. சில மற்றவர்களால் எனக்குச் சொல்லப்பட்டவை மேலும் சில அவரால் நிகழ்ந்த சிறு சிறு அற்புதங்கள் என்று அவரது அன்பர்கள் கூறுபவை.

முதலாக அவரது புற வாழ்வில் மிகவும் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் இவ்வளவு நீண்ட காலம் தன்னை சுற்றி எது நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் ஒரு சிறிதும் சலனமுறாது இருந்த ஒரே இடத்தை விட்டு அகலாமல் மௌனம் காத்து வந்ததுதான். இதைக் கொண்டு அவரைச் சுற்றி நடந்தவை அவருக்கு தெரியாது என்று கருத இடமில்லை. எப்பொழுதாவது அவர் பேசிய வார்த்தைகளைக் கொண்டு பார்த்தால் ஐந்து புலன்களின் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடியாத சில விஷயங்கள் உட்பட பலவற்றை அவர் தெரிந்து வைத்து இருந்தார் என்பது தெளிவாகிறது. ஆனால் எதனாலும் சலனமடையாது , பாதிப்படையாது வாளாவிருந்தார்.

1985 இறுதியில் கண்பிறையின் காரணமாக அவர் பார்வையை இழந்தார் இருப்பினும் மருத்துவர் எவரையும் அவரது கண்களை சோதிக்க அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக ஏற்கனவே குறைவான அவரது உடல் தழுவிய செயல்கள் மேலும் குறைந்தன. திண்ணைக்கு அருகில் மேசை மேல் வைக்கப்பட்ட தட்டில் உள்ள உணவை எடுத்து திண்ணையில் சாய்ந்தவாறே உண்டார். திண்ணையை ஒட்டி வைக்கப்பட்ட பாத்திரத்தில் தேகசுத்தி செய்து கொண்டார். இதை தவிர்த்து தேகத்தின் நலமும் வலுவும் குலைந்து போவது குறித்து சற்றும் கவலையுறாது முற்றிலும் உதாசீன பாவத்தில் இருந்தார். அவரது அகநிலை எப்பொழுதும் அசைவற்று இருந்தது.

இறுதியாக அவரது 91 வது பிறந்த நாளுக்குச் சில நாட்களுக்கு முன்பு அச்சுற்றுச் சுவருக்குள் இருந்த அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த அதிகாலை நேரத்தில் ஓசையில்லாத வாழ்ந்த அவர் ஓசைப் படாது உடலை நீத்தார். அவரது புனித உடல் வழக்கம் போல் திண்ணையில் சாய்ந்திருந்தது. அண்ணாமலையின் மேல் புனித தீபம் ஏற்றப் படுவதற்கு சிலமணி நேரம் முன்பாக அன்று மதியம் அவரது புனித உடல் சாதுக்களுக்கு உரிய மரபின் படி பக்தி சிரத்தையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவர் அடக்கம் செய்யப் பட்டுள்ள இடம் சாது ஓம் சுவாமிகளின் சமாதி ( ஞானாலயம் ) கோவிலுக்கு பக்கத்தில் , அவர் இவ்வளவு காலம் வாழ்ந்திருந்த திண்ணையை ஒட்டி உள்ளது.

சும்மாவிருத்தலின் மகத்துவத்தை அறியாது செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவ்வுலகத்தின் பார்வையில் திண்ணை சுவாமிகளின் மகத்தான வாழ்வில் பெருமை ஏதும் இல்லாது போல் தோன்றலாம். அவர் பேசவோ , எழுதவோ , உபதேசிக்கவோ இல்லை. இவ்வுலத்தினரால் கருதப்படும் உபகாரமான காரியம் ஒன்றும் அவர் செய்யவில்லை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகின்றதோ இல்லையோ அவரது சும்மா இருத்தலே பகவான் இவ்வுலகத்திற்கு அளித்த பேரருளாம். அவ்வருளின் பலனை அறியவோ , அளக்கவோ நமது மதியால் இயலாது. “ குருவாசகக் கோவையின் 303 வது பாடலை நினைவு கூறலாம் :

--------------------------------------------------------------------------------------------
பாவமெலாம் பாற்றும் பரம பவித்திரமாம்
தேவர் மிசையிந்தபரி சேட(ம்) என்பர் – பூவுலகிற்
சச்சிட்டர் வாழுஞ் சதாசார வாழ்வேஅவ்
உச்சிட்ட மாக்கொ(ள்) உளத்து

“ ஜீவன் முக்தர்களான ஞானிகள் இவ்வுலகில் வாழக் கிடைப்பதே இவ்வுலகம்பெற்ற ஈசுவரப் பிரசாதம் ஆகும். அகந்தையை இறைவன் உண்டொழித்த பின் மிஞ்சுவது பரம பவித்திரமான ஆன்ம சொரூபமாதலால் ஆன்மஞானிகளே ஈசுவரபிரசாதம் ஆவர். பரம பாவன பிரசாதத்தால் பாவமெல்லாம் நீங்குவது போலவே ஞானிகளின் வெறும் இருப்பே சாந்நித்யமே – ( அவர்கள் பேசவோ , உபதேசிக்கவோ , எழுதவோ கூட வேண்டியதில்லை ) பூவுலகின் பாவங்கள் அனைத்தையும் நீக்கி விடும் என்பதாம் ”         

No comments:

Post a Comment