Wednesday, 4 March 2026

இதயம் முத்து அண்ணாச்சி

இதயம் நல்லெண்ணெய் நிறுவனர் உயர்திரு முத்து அவர்கள் காலமானார் என்ற செய்தியை அதிர்ச்சியை தருகிறது.

 20 ஆண்டுகளுக்கு முன் புளியங்குடியில் ஒரு ரோட்டரி கிளப் நிகழ்ச்சியில் சந்தித்து உங்களிடம் பேச வேண்டும் என்று கூறினேன்.

நிகழ்ச்சி முடிந்ததும் தனியாக நேரம் ஒதுக்கி என்னிடம் பேசினார் என்றார்.

நான் பேசாமல் சென்று விடுவாரோ என்று தயக்கத்திலே நின்றேன்.

 அதை பார்த்து.... கண்டிப்பாக உங்களிடம் பேசுகிறேன் தம்பி என்றார் 20 நிமிடங்கள் நேரம் ஒதுக்கி எனக்கு தொழில் முனைவில் உள்ள சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்து வைத்தார். 
நான் அவரிடம் கேட்ட கேள்வி பதிலை ஒரு சிறிய இதழுக்கு அனுப்பி வைத்தேன் அது அதில் பிரசுரமானது அதை அவருக்கும் அனுப்பி வைத்தேன் மிக்க மகிழ்வோடு பதில் கடிதம் அனுப்பி வைத்தார் 

இதற்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்து அண்ணாச்சியின் அங்கம் வகித்த jci அமைப்பில் நானும் சேர்ந்தேன் அதன் தலைவராக 2019 எனது ஊரில் பணி செய்தேன் .

ஒருமுறை மதுரையில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் தனியாக அவரிடம் சந்தித்து மீண்டும் நாம் சந்தித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் மிக்க மகிழ்ந்தார்.

 மூன்று முறை எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது மூன்று முறையும் நான் அவரிடம் கேட்ட கேள்வி தற்போது என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் சிறிதும் தயங்காமல் ஏதோ ஒரு ஆங்கில நூலையும் இல்லாதது தமிழில் உள்ள தன்னம்பிக்கை தரும் ஏதோ ஒரு பாடலையும் பகிர்ந்து கொள்வார்.

பல இளம் தொழில் முனைவோர்களையும் ஒரு தொழிலை எப்படி நேர்த்தியாக நடத்துவது என்பது பற்றியும் இவரது காணொளிகள் நிறைய காணக் கிடைக்கின்றன.

 அவை காலத்தின் அழியாத ஒரு சிறந்த செல்வமாகும் அன்னாரின் நினைவை போற்றுவோம் அவரின் வழியை தொடர்வோம் இறைவனின் நிலையில் உங்களது ஆன்மா சாந்தி அடையட்டும் ஐயா


JC.ஜெயராம் 
JCI kadayanallur best

Monday, 9 February 2026

ஓவியர் ஷ்யாம் கனவு ஆசிரியர் பிப்ரவரி 2026 இதழில் எழுதிய ஓவியம் சார்ந்த கட்டுரை



"ஒவ்வொரு குழந்தையும் ஒரு கலைஞன். 'ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகு அந்தக் கலைஞனாகவே இருப்பது தான் சிக்கல்." இப்படிச் சொன்னவர் உலகின் மகத்தான ஓவியர்களில் ஒருவரான பாப்லோ பிகாசோ.


தன் வாழ்நாளை ஓவியத்திற்காகயே செலவழித்த அவர் சொல்வதால் கலைஞன் எனும் இடத்தில் 'ஓவியர்' எனும் சொல்லை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்.

ஒரு குழந்தை வளர்ந்த பிறகு கலைத்தன்மையோடு இருக்க வேண்டும் எனில் அதற்கு முதன் முயற்சி எடுக்க வேண்டிய நபர் அக்குழந்தையின் ஆசிரியர்

கலை குறித்து ஆசிரியர்கள் ஆர்வத்தோடு தெரிந்துகொள்வது மிகவும் நல்லது. கலையில் என் துறை ஓவியம் எனவே ஓவியம் குறித்து ஆசிரியர்கள் பல்வேறு செய்திகளையும் வரலாற்றையும் தெரிந்துகொள்வது அவசியம்

இந்த உலகின் முதல் மொழி ஓவியம்தான் கற்கால மனிதர்கள் தாங்கள் பார்த்ததை அடுத்த தலைமுறைக்கு ஓவியமாகப் பாறைகளிலும் குகைகளிலும் தீட்டிச் சென்றனர்.

எந்த மொழியும் உருவாவதற்கு முன்பே அவர்களின் வாழ்வியளைக் குறியீடுகளாக அதாவது கோடுகளாகவும் வட்டங்களாகவும் முக்கோணங்களாகவும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். அதனால்தான் உலகின் முதல் மொழி ஓனியம்.

பாடப் புத்தகங்களை ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு முன்பே அவை குழந்தைகளை ஈர்ப்பதற்கு முதன்மையான காரணம் அவற்றில் உள்ள ஒவியங்கள் தான் பலரின் முதல் ஓவியம்கூட பாடப் புத்தகத்தில் உள்ளதைப் பார்த்து வரைந்ததாகவே இருக்கும்.

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்துகிறார். அப்போது ஒரு பகுதியை வார்த்தைகளால் விவரிக்கிறார். அதை மாணவர்கள் தம் கற்பனையில் காட்சியாக உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் தாம் சொல்வது துல்லியமாக மாணவர்களுக்குப் புரிந்துள்ளதா எனும் சிறு தயக்கம் ஆசிரியருக்கு எழுகிறது. உடனே, தான் விவரித்த பகுதியை ஓவியமாகக் கரும்பலகையில் வரைகிறார் அப்போது மாணவரின் கற்பனையில் உருவான காட்சியும் கரும்பலகை ஓவியமும் பொருந்திப் போனால் பாடம் மிகத் துல்லியமாக அவர்கள் மனதில் பதிந்துவிடும் மாறாக மாணவர் மன ஓவியமும் ஆசிரியர் வரைந்த கரும்பலகை ஓவியமும் வேறுபட்டால் மாணவர் தம் மனச்சித்திரத்தைத் திருத்திக்கொள்வர்.

சில ஆசிரியர்கள் அந்த வகுப்போடு அங்கு வரைந்த ஓவியத்தை மறத்துவிடக் கூடும் அப்படி மறந்துவிடாமல் அந்த ஓவியம் மாணவர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் உரையாடும்போதுதான் ஓவியத்திற்கும் கற்றலுக்கும் உள்ள இணக்கம் புரிய வரும்.

ஓர் ஓவியம் என்பது வெறுமனே உருவத்தைக் காட்டுவது மட்டுமல்ல. வரலாறு பாடத்தில் ராஜராஜ சோழன் பற்றி இடம்பெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் இருக்கும் ராஜராஜ சோழனின் ஓவியம், அப்போதைய மனிதத் தோற்றம், ஆபரணங்கள், மாளிகைகளின் வண்ணம், நாற்காலிகளின் வடிவம் என அந்த ஓவியத்தில் கவனிக்க ஏராளம் இருக்கும்.

கணிதம் என்றாலே எண்கள்தானே என்று சிலர் நினைக்கலாம். அப்படியல்ல, கணிதத்திற்கும் ஓவியத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. கணிதத்தில் இடம்பெறும் வட்டமும், கட்டமும் ஓவியத்தின் பகுதிகள்தானே! ஒரு கட்டடத்திற்கான அடித்தளம் போடுவதற்கு முன்பே அது வரையப்படும் அல்லவா! அது ஓர் ஓவியமே. அந்த ஓவியத்தில் உள்ள கட்டடம் நிலைத்திருக்கத் தேவையான அடித்தளக் கணக்கைப் போடுவோம்.

ஓவிய சாஸ்திரப்படி கட்டங்களால் ஆனதே ஓர் ஆணின் உருவம். வட்டங்களால் ஆனதே ஒரு பெண்ணின் உருவம் மனித உருவங்களோ, சிற்பங்களோ செதுக்குவதற்கும் வரைவதற்கும் ஓர் அளவுகோல் உள்ளது. உதாரணத்திற்கு நெற்றியின் அளவு மட்டும் இரண்டு இஞ்ச் என்ற கணக்கில் கொண்டால், மொத்த முகத்தையும் திட்டமிட்டால் சரியான முக அமைப்பைத் தந்துவிடும்.

கணக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியருக்கு இந்த ஓவிய அளவுகள் கூடுதலாகத் தெரிந்து இருந்தால்தான் கற்பித்தலுக்கு இன்னும் உதவியாக இருக்கும்

கட்டமான வீட்டில் அமர்ந்து, கட்டமான மேஜையில், கட்டமான மடிக்கணினியில் வேலை பார்க்கிறோம். அப்போது வட்டமான மூக்குக் கண்ணாடி அணிந்து, வட்டமான காபி குவளையில் தேநீர்க் குடிக்கிறோம். சிறிது நேரம் கழித்து வட்டமான தட்டில் சாப்பிடுகிறோம். இப்படி நாம் காண்பதும் பயன்படுத்துவதும் அனைத்துமே வட்டத்திலும் கட்டத்திலும் அடங்கி விடுகின்றன. இவைகணிதப் பாடத்திற்கு மிக நெருக்கமானவை என்று ஓர் ஆசிரியர் கூறினால், அந்தக் கணித ஆசிரியர் ஓவியக் கண் கொண்டு பார்த்தால், பாடத்தை எளிதாக மாணவருக்குக் கடத்திவிட முடியும்.

அறிவியல் பூர்வமாகவும் வண்ணங்களை நாம் அணுக முடியும். நீல வண்ணத்தில் மட்டுமே 67 வகைகள் உள்ளன. வண்ணங்களையும் வானத்தின் நிற மாற்றங்களையும் மண்ணின் வண்ணங்களையும் வைத்து அறிவியல் ஆசிரியர் சுவையாக அந்த வகுப்பை நடத்திவிட முடியும்.

இப்படி ஒவ்வொரு பாடத்திற்கும் ஓவியத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கிக்கொண்டே போகலாம்.

ஓவியத்தில் ஆர்வம் உள்ள மாணவர்கள், சுற்றியுள்ளவற்றைக் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். ஒருவரின் உடை, கைகளை ஆட்டும் விதம், முகப்பாவனை என அனைத்தையும் துல்லியமாகப் பார்ப்பர். அதேபோலத் தங்கள் உடைகளையும் பழக்கவழக்கங்களையும் நல்லவிதமாக மாற்றி அமைத்துக் கொள்வர்.

ஓவியத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லலாம். சித்தன்னவாசல். தஞ்சாவூர் போன்ற தொன்மை வாய்ந்த இடங்களில் உள்ள ஓவியங்களைக் காணச் செய்யலாம்.

பழங்கால ஓவியங்கள், தாவரங்களையும் மலர்களையும் மற்றும் மரப்பட்டைகளை எண்ணெயில் காய்ச்சிப் பதப்படுத்தியும் வரையப்பட்டிருக்கின்றன. வண்ண வண்ண மலர்களை அரைத்து சூரிய ஒளியில் காயவைத்துப் பொடியாக்கி அவற்றை ஓவியங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படியான செய்திகளை ஆசிரியர் முன்கூட்டியே தெரிந்துகொண்டு சென்றால் மாணவர்களிடம் பகிர உதவியாக இருக்கும்.



ஓவியங்களின் துணைக்கொண்டு கற்பிக்கும்போது கற்றலும் எளிமையாக இருக்கும்.

Wednesday, 3 December 2025

ஏவிஎம் சரவணன்




திரு. ஏவிஎம் சரவணன் அவர்கள் காலமானார் 04-12-2025 என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இவர் எழுதிய வாழ்வியல் நூல் முயற்சி திருவினையாக்கும்.
இதில் ஏவிஎம் நிறுவனம் வந்த பாதை கடந்த சோதனை மற்றும் பெற்ற வெற்றிகள் என்று பலவற்றை எழுதியுள்ளார்.

மிக சிறந்த பண்பாளர்.

இன்றைய சொல் வழக்கில் உள்ள பிரதர் என்ற வார்த்தையை அன்றே பயன்படுத்தியவர்.

மூன்று மாநில முதல்வர்களை இயக்கிய பெருமை இவர்களை சாரும்.
எம்ஜிஆர் முதல்வரான போது நான்கு மணி நேரம் வரிசையில் நின்று வாழ்த்து சொன்னார். இதை கண்ட எம்ஜிஆர் மறுநாள் காலையில் வீட்டிற்கு அழைத்து கடிந்து கொண்டார்.

நீங்கள் எனக்கு சம்பளம் தந்த முதலாளி என்று வாஞ்சையுடன் பகிர்ந்து கொண்டார்.

திருவண்ணாமலை ஈசன் நிழலில் ஆன்மா இளைப்பாறுதல் பெறட்டும்.

அருணாசல சிவ.

Friday, 21 November 2025

வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்

கலம்பகம் ஓர் அறிமுகம் 

கலம்பு + அகம் = கலம்பகம் என்றும் பிரித்துப் பொருள் கொள்வர்.கலம்புதல் - புகழ்தல். எனவே, கலம்புதல் என்பதற்கு விரித்தல் - புகழ்தல் என்ற பொருண்மையைக் காட்டலாம் என்பர்.

முதலில் வரும் கலிப்பாவில் பாட்டுடைத்தலைவன் புகழ் பாடப்படும்; பின்னர் நூல் முழுவதும் அப்புகழே விரித்துரைக்கப்பெறும். 
     
இத்தகைய புகழும் தன்மையாலும் விரிக்கும் தன்மையாலும் கலம்புதல் என்ற பொருண்மை அடிப்படையில் கலம்பகம் என வந்தது என்றும் கூறுவர்.



சிறந்த கலம்பக ஆசிரியர்கள்

புகழேந்திப்புலவர் (கி. பி. 12 ஆம் நூற்றாண்டு) 

உதீசித்தேவர் இரட்டைப் புலவர்கள் (கி.பி.14 ஆம் நூ) தத்துவ ராயர் (கி.பி.16ஆம் நூற்றாண்டு), 
குமரகுகுபரர், துறைமங்கலம் சிவப்பிரகாசர் (கி.பி. 17 ஆம் நூற்றாண்டு) ஆகியோரும் சிறந்த கலம்பக ஆசிரியர்களாகத் திகழ்கின்றனர்.

தமிழில் முதன்முதலாக வைணவக் கடவுள்மீது எழுந்த முதற்கலம்பகம் திருவரங்கக் கலம்பகமே. கி.பி. 17ஆம் நூற் றாண்டில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய இலக்கலம்பகத்தின் தொடர்ச்சியாகத் தமிழில் பல கலம்பக நூல்கள் எழுந்துள்ளன.

அடுத்து, கி.பி. 18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர், படிக் காசுப்புலவர். சீனிப்புலவர், கந்தப்பையர் போன்றோர் கலம்பகம் பாடினர். 

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் தமிழில் மிக அதிகமான கலம்பகங்கள் உருவாயின .தண்டபாணி சுவாமிகள், தொழுவூர் வேலாயுத முதலியார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை. இராசப்ப நாவலர், வீரராகவ முதலியார், அட்டாவதானம் சபாபதி முதலியார், பூண்டி அரங்கநாத முதலியார். திருஎவ்வுளூர் இராமசாமி செட்டியார் போன்றோர் இருபதுக்கு மேற்பட்ட கலம்பகங்களை இயற்றியளித்துள்ளனர்.

தமிழில் மிக அதிகமாகக் கலம்பகம் பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளே ஆவார். புதுவைக் கலம்பகம் (இப்பொழுது கிடைப்பதில்லை). நெல்லைக் கலம்பகம், சென் னைக் கலம்பகம்,மயிலாசலக் கலம்பகம், பழநிக் கலம்பகம் வீரை நவநீதகிருட்டிணன் கலம்பகம் ஆகிய ஆறு கலம்பகங்களை இவர் இயற்றியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கலம்பகத்தின் பொதுவமைப்பு

1. பாட்டுடைத் தலைவரின் புகழைப் பாடுவது

2. தொடர்கதை அமைப்பற்றதாகப் பாடுவது

3. முதலில் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவும், அதனை யடுத்து ஒரு வெண்பாவும், பின்னர் ஒரு கலித்துறையும் இடம்பெற்று மேலே பல யாப்புகளில் பாடல் அமைப்பது

4. அம்மானை அல்லது ஊசல் முக்கிய உறுப்பாக அமைப்பது

5, வகுப்புப் பாடல் கட்டாயம் கட்டாயம் அமைப்பது

6. பத்துக்கும் மேற்பட்ட யாப்புகள் அமைப்பது

7. நூல் மண்டலித்து முடிய அமைப்பது

8. அந்தாதியாக அமைப்பது

9. நூறு என்ற அளவிலேயே பாடல்களை அமைப்பது

10. அகப்பாடல், புறப்பாடல் கலந்து அமைப்பது

11. எட்டிற்கும் மேற்பட்ட கலம்பக உறுப்புக்களை அமைப்பது 

12. அரசர், முனிவர், கடவுள் என்ற மூவரையே பாடு பொருளாகக் கொள்வது

13. புதிய உறுப்புக்களால் பாடல் அமைப்பது

14. ஆசிரியர் கூற்றாக மட்டும் அமையாது, வேறு மாந்தர் கூற்றுகளும் வர அமைப்பது

என இவ்வாறு சில பொது மரபுகளை இக் கலம்பக இலக்கியங்கள் கொண்டுள்ளன. பாடல்களில் அந்தாதித் தொடர்பும், பாட்டுடைத் தலைவனின் தொடர்பும் ஒருங்கு அமைவது கலம்பக இலக்கியத்தின் தனிச்சிறப்பாகும்.


வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் வரலாறு 

தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில்நாயகம் பிள்ளை - பேச்சிமுத்து ஆகியோருக்கு 1839 இல் பிறந்தார். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம். 


சீதாராம நாயுடு என்பவர் தொடர்பால் இவருக்கு முருகன் மீது பக்தி உருவாயிற்று. ஆரம்பக் கல்வியை முடித்த இவர், இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமை பெற்றார். எட்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார்.


தென்காசி நகரை யடுத்த சுரண்டை என்னும் ஊரில் இவரது பெரிய தாயாரின் வீடு இருந்ததால், பெரிய தந்தையான சிதம்பரம் பிள்ளை என்னும் குணசீலர், சங்கரலிங்கரை அன்புடன் அழைத்துச் சென்று, வேண்டிய வசதியுடன் அவ்வூர்ப் பள்ளியிற் கல்வி பயிலச் செய்தனர். அப்படிச் சிலகாலம் தங்கிக் கற்றார். வயது எட்டரை ஆயிற்று.


அவ்வூரின் அருகிலுள்ள, சித்திரா நதிக் கரையில் ஓர் அம்மன் கோயில் உள்ளது. அங்கு பலர் கூடிச் சிறப்பான முறையில் தூய்மையுடன் வழிபாடு செய்யும் போது இவரும் சென்றிருந்தனர். அந்த அம்பிகைக்குப் பூமிகாத்தாள் என்ற பெயர் பலரும் கூறுவது கேட்டனர். இந்தப் பெயர் வந்த காரணம் யாது என்று அங்கிருந் தோரிடம் கேட்டனர். யாரும் தக்க பதில் கூறவில்லை. அந்த வேளையில் சங்கரலிங்கர் திருவருளின் செயலால் முன்னைய தொடர்பு காரணமாக ஒரு வெண்பா புதிய தாகக் கூறிப் பொருளும் கூறினர்.


"அமுதம் கடையும்நாள் ஆலம் வெடித்துத் திமுதமெனத் தீயெரித்துச்சென்ற(து)-அமுதமெனத் தீக்கடவுள் உண்டார் திருக்கண்டத் தைப்பிடித்துக் காத்ததனாற் பூமிகாத் தாள்.


என்பது அப்பாடலாகும்.
கவிதை பொழியும் இவருடைய ஆற்றலைக் கண்டு வியந்த சீதாராம நாயுடு இவருக்கு "ஓயா மாரி" என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். தனது பதின்மூன்று வயதில் ’வண்ணம்’ என்ற சந்தப்பா பாடுவதில் வல்லமை பெற்றிருந்ததால் வண்ணச்சரபம் என்றும், முருகன் புகழ் பாடியதால் இவர் "முருகதாசர்" என்றும் அழைக்கப்பட்டார். இவர் முருகனின் திருப்புகழை விரும்பிப் பாடிக்கொண்டே இருந்ததால் "திருப்புகழ்ச் சுவாமிகள்" என்றும் சிறப்பிக்கப்பட்டார். அரையில் கௌபீனமும், கையில் தண்டமும் கொண்டிருந்ததால் தண்டபாணி சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார். 


தமிழகத்தில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று திருத்தலங்கள் தரிசனம் செய்து பாடல்கள் இயற்றியுள்ளார். கேரளம் மற்றும் இலங்கைக்கும் இவர் பயணம் செய்துள்ளார்.

ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் ஆகிய நாற்கவியிலும் வல்லவர் இவர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்று தலங்கள் தோறும் சென்று பாடும் இயல்பினைக் கொண்டிருந்த இவர் பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார். திருவரங்கத் திருவாயிரம், திருமாலாயிரம், தில்லைத் திருவாயிரம், பழநித் திருவாயிரம், ஞாயிறு ஆயிரம், கணபதி ஆயிரம், புலவர் குருபரதத்துவம், புராணம், அருணகிரிநாதர் புராணம், அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத் தியல்பு போன்றவற்றுடன் அந்தாதி, கலம்பகம், கோவை, திருப்புகழ், வகுப்பு, மாலை, அலங்காரம், பதிகம், கவசம், பஞ்சகம் எனப் பலவகைகளில் பாடல்கள் இயற்றியருளியுள்ளார். இவர்
அணலிலும் புனலிலும் இட்டவை போக இப்பொழுது சுமார் 50,000 பாடல்கள் இவருடைய கையெழுத்தில் ஓலைச் சுவடிகளாகப் பாதுகாக்கப் பெற்றுள்ளன.

தண்டபாணி சுவாமிகள் சிறந்த சமயப் பற்றுடையவர். புலால்மறுத்தல், தெய்வ வழிபாட்டில் உயிரிப்பலியைத் தவிர்த்தல். இறை வழிபாட்டில் சமயச் சமரச நிலையை வலியுறுத்தல் ஆகியவற்றிற்காகத் தம் வாழ்நாள் முழுமையையும் அர்ப்பணித்தவர் இவர்.

சமய நிலையில் எத்தெய்வத்தை முன்னிறுத்திப் பாடினாலும் அத்தெய்வமே முதன்மையானது எனத் துணிந்து கூறும் இவர் மற்றொரு தெய்வத்தை நிந்திப்பது என்பது இல்லை. ஏனெனில் அனைத்துத் தெய்வ வடிவங்களும் ஒரே பரம்பொருளின் பல்வேறு வடிவங்கள் என்னும் சமரச நிலையைக் கொண்டவர் இவர். இருப்பினும், தொடக்க காலத்தில் சிவவழிபாடு கொண்டிருந்த இவர் திருமாலை அவ்வளவாக வழிபட்டாரில்லை. சமய நூல்களைக் கற்குமிடத்து நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் சிறப்பைப் படித்தறிந்த பின்பே வைணவ சமயத்தின் பெருமையை உணர்ந்தார் என அறிஞர்கள் கூறுவர்.

இவர் திருமால் மீது ஈடுபாடு கொண்டு பாடிய பாடல்கள் பலவாம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மீது திருஎழுகூற்றிருக்கை, திருவரங்கள் பேரில் திருவரங்கத் திருவாயிரம், திருவயிந்திரபுரம் பெருமாள் பதிகம் திருவனந்தபுரம் யமக அந்தாதி, திருக்கண்ணபுரம் பெருமாள் பதிகம். விஷ்ணுபுரம் ஒருபது கூற்றிருக்கை, அரி ஏகபாதத்தந் தாதி, திருமாலந்தாதி, திருமகளந்தாதி எனப் பல அரிய இலக்கியங்களை இவர் படைத்தளித்துள்ளார். இவையன்றி திருமால் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று அங்கு எழுந் தருளியுள்ள பெருமாள். இலக்குமி, அனுமார் ஆகியோர் பெயரில் பதிகம், திருப்புகழ், வெண்பா, அந்தாதி, வகுப்பு போன்றவற்றையும் பாடியுள்ளார். இவற்றுள் பல அவ்வப்போது அச்சாகியுள்ளன.பல இன்னும் அச்சாகது சுவடி வடிவில் உள்ளது.

இவர் இயற்றிய தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஊரில் உள்ள நவநீதகிருட்டிணன திருக்கோயில் கலம்பகம் என்னும் இந்நூல் இன்னும் அச்சாகாமல் சுவடி வடிவிலேயே இருந்தது . இதை டாக்டர் வே. இரா. மாதவன் நூல் வடிவில் கொண்டு வந்தார்.

திருமால்மீது இவ்வாசிரியர் கொண்ட பக்தியும் ஈடுபாடும் இக்கலம்பகத்தால் நன்கு விளங்கும்.


வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திருவரங் திருவாயிரம் நூலைத் திருவரங்கக் கோயிலிலே அரங்கேற்று போது பலருக்கும் அழைப்பு அனுப்பினர். நாடெங்கிலுமிருந்து புலவர்கள் வந்து திருவரங்கக் கோயிலில் கூடி அவ்வமயம் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஜமீன் மருதப்பர் இவர்பால் அன்புகொண்டு தம் அவைப் புலவரை அரங்கேற்ற வைப திற்கு அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மருதப்பர் அவைப் புலவராகிய கந்தசாமிப் புலவர் கண்ணபிரான் பேரில் அரிய பிரபந்தங்களைப் பாடியவராதலால் அவரை அனுப்பி வைத்தார்.

திருவரங்க அரங்கேற்றத்தில் இப் புலவரே கையேடு படிக் தண்டபாணி சுவாமிகள் ஆயிரம் பாடல்களுக்கும் பொருரைத்து அரங்கேற்றினார் என்பது அரிய வரலாற்று நிகழ் யாகும்.

"பொன்னையுறழ் தமிழரச னாகிவீரை 
புரந்தஇத யாலயன் தன் புலவனாகிப் 
புன்னைவிழை கண்ணனிசை புகன்றவாய்மை 
புனைந்தகந்த சாமிப்பேர்ப் புலவன் தானும்"

"இவரனுப்பும் பத்திரிகை கண்டுசிந்தை
 யினின் மகிழ்வுற் றரங்கநக ரினில்வந்துற்றார்"

"கருச்சிறைதீக் கிடுமரங்கத் தாயிரம்பாக் 
கழறமுதற் துவக்கியெழிற் கந்தசாமி

திருச்சிறந்த கையேடு படிக்கத்தாமே 
செப்புபொருள் விரித்தனர்மெய்த் தேவரார்ப்ப"

என்னும் பாடலடிகள் இவ்வரலாற்றை விளக்கும்.

'"தென்குருகைச் சடகோபன் தனக்குமுன்னாள் 

செறிமதுர களிமமைந்தாங் இந்நாளிந்த 

வின்குரற்பா வலன்கையேட்டினுக்குவாய்த்தா 

னென்று பலர் தாமுமுரைத் தின்பமுற்றார்"

என அவ்வரங்கேற்ற நிகழ்ச்சி சிறப்புற்றதை விவரிப்பர்.

தண்டபாணி சுவாமிகள் நம்மாழ்வார் போன்றும் சுந்தசாமிப் புலவர் மதுரகவி போன்றும் அன்று ஏடுபடித்து எம்பெருமானின் பாடல்களுக்குப் பொருளுமுரைத்து அரங்கேற் றியதைச் சான்றோர்கள் பாராட்டி யுரைத்துள்ளனர். இத்தகைய பக்திப் பெருக்கினைக் கொண்ட புலவர்களைப் போற்றியவர் ஜமீன் மருதப்பர் என்பது குறிக்கத்தக்கதாகும்.

இருதயாலய மருதப்பர் வீர கேரம் புதூரில் உள்ள நவநீதகிருட்டிண சுவாமியிடம் கொண்டிருந்த பக்திப் பெருக்கும் தண்டபாணி சுவாமிகள் திருமால்மீது கொண்டிருந்த பக்திப் பெருக்கும் ஒருசேர இணைந்ததன் விளைவாகவே இந்த நவநீதகிருட்டிணன் கலம்பகம் உருவாகியுள்ளது என்பதை இக் கலம்பகத்தை ஆழ்ந்து கற்பார் நன்கு உணர்வர்.


கலம்பக நூலில் சிறந்த நூலாக வீ கே புதூர் நவநீத கிருஷ்ணன் கலம்பகம் உள்ளது. இந்த நூலைப் பற்றியும் இதனை இயற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பற்றியும் சுவாமிகள் எழுதிய பிற நூல்கள் பற்றியும் தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் வெகுஜன மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். இது தமிழுக்கு நாம் அனைவரும் செய்யும் அரிய தொண்டாகும்

உயிர்க்கொலை கூடாது என்பதையும் எல்லாச் சமயங்களும் ஒன்றே என்பதை உணர்த்தியுள்ளார் வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள். இறுதி கட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் திருவாமாத்தூர் எனும் பாடல் பெற்ற திருத்தலத்தில் கவுமார மடம் நிறுவி அங்கேயே தங்கவிட்டார். சுவாமிகள் எழுதிய பல்வேறு ஓலைச் சுவடிகள் இங்கு உள்ளது.

ஸ்வாமிகள். தனது 59 ஆவது வயதில் 1898 ஆம் ஆண்டு ஆனிமாதம் 23 ஆம் நாள் மறைந்தார்.

தொகுப்பு 
ஜெயராம் ஜி 
ஓவிய ஆசிரியர்
கடையநல்லூர் 
சிற்றுளி ஜூலை - செப்டம்பர் இதழில் நான் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் பற்றி நான் எழுதிய கட்டுரை 

Thursday, 20 November 2025

ஓவியர் மாயா

அ ந்த இளைஞருக்கு வயது தொண்ணூற்று ஆறு. ஆமாம். பதினேழு வயதில் பத்திரிகைகளில் ஓவியம் வரையத் தொடங்கி, இன்று தொண்ணூற்றாறு வயதிலும் நான் வரையத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லும் ஓவியர் மாயாவை இளைஞர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

தொண்ணூறுகளில் வந்த பத்திரிகைகளில் இவர் கைவண்ணத்தில் தோன்றிய ஒளியப் பெண்களைப் பார்த்து காதல்கொண்டு கனவுகண்டு ஏங்கிய இளைஞர்கள் எத்தனை எத்தனையோ பேர் குமுதத்தில் ஜெயலலிதா எழுதிய தொடருக்கு இவர் வரைந்த ஓவியங்கள் ஜெயலலிதாவாலேயே பாராட்டப்பட்ட மாஸ்டர் பீஸ் இந்த வயதிலும் துறுதுறு என்று தூரிகையைத் தூக்கக் காத்திருக்கும் மாயாவை, மாலை. வேளை ஒன்றில் சந்தித்தோம்.

நீங்க பிறந்தது எங்கே? உங்க ஓவியங்கள் பிறந்தது எப்போ?

1927 ம் வருஷம், திருநெல்வேலியில பிறந்தவன் நான். அப்பா அம்மா எனக்கு வெச்ச பேரு மகாதேவன். எங்க அப்பாவுக்கு பிரிட்டிஷ் கவர்மெண்ட்ல சர்வேயர் வேலை. அம்மா குடும்பத் தலைவி அப்பாவோட பணி காரணமா, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னைன்னு மாறிகிட்டே இருந்ததால், எங்க வாழ்க்கையும் படிப்பும் இப்படி வெவ் வேறு இடங்கள்ல மாறிமாறிதான் நிகழ்ந்துச்சு.

ஸ்கூல்ல படிக்கற சமயத்துலயே நல்லா படம் வரைவேன். இந்தத் திறமை எனக்கு எப்படி வந்துச்சுன்னு தெரியலை.
அதேசமயம், அந்தக் காலத்துல சினிமா போஸ்டருக்கான படங்களை பிரின்ட் செய்யறதுக்காக மெட்டல் ப்ளேட்ல் என்க்ரேவிங் செய்வாங்க, அதை நான் வேடிக்கை பார்க்கறது. உண்டு. அதனாலகூட எனக்கு வரையறதுல இன்ட்ரஸ்ட் வந்திருக்கலாம்னு தோணுது.

-

ஸ்கூல் டைம்ல நண்பர்கள் தங்களோட ரெக்கார்ட் நோட்புக்ஸ்லயும் சில ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சிக்கான - நோட்டுகள் லயும் வரைஞ்சுதரச் சொல் வாங்க, அப்படி வரைஞ்சு கொடுத்தா. காலணா, அரையணா கொடுப்பாங்க. அல்லது தின்பண்டம் ஏதாவது வாங்கித் தருவாங்க ஏழ்மையான குடும்பம் என்பதால, படம் வரைஞ்சா ஏதாவது கிடைக்கும் என்ற ஆர்வமே என்னை நிறைய வரையத் தூண்டிச்சு.

எஸ்.எஸ்.எல்.சியில் ஒரு மார்க்ல தேர்ச்சியைத் தவறவிட்டுட்டு வருந்திகிட்டு இருந்த சமயத்துல, 'பிக்சர் 'பிக் போஸ்ட் அப்படிங்கற சினிமா பத்திரிகைல படம் வரையக் கூப்பிட்டாங்க. அப்படித்தான் என்னோட பத்திரிகை ஒவிய ஜனனம் நிகழ்ந்துச்சு!"

மகாதேவன் மாயாவாக மாறினது, எப்போ?

'சினிமா பத்திரிகைல வரைஞ்சுகிட்டிருந்த எனக்கு, வாரப்பத்திரிகை ஒண்ணுல நிரந்தரப் பணி கிடைச்சுது. அப்போ ஓவியத்துக்குக் கீழே மகாதேவன்னு நான் போட்ட கையெழுத்து ரொம்ப பெரிசா இருக்கறதால மாற்றிக்கச்சொன்னாங்க தேவன்னு போடலாம்னு நினைச்சேன். ஆனா, தேவன் என்கிற பெயர்ல ஓர் எழுத்தாளரும் இருந்ததால், என்ன செய்யலாம்னு யோசிச்சேன். என் மனைவியோட ஊரான கங்கைகொண்டான்ல மகாதேவன்கிற என் பெயரை மாயான்னுதான் பலரும் கூப்பிடுவாங்க அதனால், மகாதேவன் மாயாவா மாறினேன்!"

உங்க ஓவியங்கள்ல இடம்பெறும் பெண்கள் தத்ரூபமா இருக்காங்களே... அதுக்கான மாடல்கள் யார்?

"இந்த சந்தேகம் அந்தக் காலத்துலயே பலருக்கும் இருந்துச்சு. நான் எங்கோ பார்த்த பெண்ணை அல்லது மாடலைத்தான் வரையறதா நினைச்சுகிட்டு அந்தப் பெண் எங்கே இருக்காங்க, என் மகனுக்குப் பெண் பார்க்கணும்னு கேட்டவங்கள்லாம் உண்டு. என் மகனோட ஃப்ரெண்ட் ஒருத்தன், என் ஓவியம் ஒண்ணைக் காட்டி 'உங்க அப்பாகிட்டே இந்தப் பெண் யார்னு கேட்டுச் சொல்லு. இவளைத்தான் நான் கல்யாணம்பண்ணிக்க ஆசைப்படறேன்'னு சொல்லியிருக்கான் இதை என் மகன் என்கிட்டே சொல்லி சொல்லி சிரிச்சான்! உண்மையிலேயே என் ஓவியப் பாவைகளை நான் கற்பனையில் மட்டும்தான் பார்த்திருக்கேனே ஒழிய நேரில் பார்த்ததே இல்லை 

உங்களால மறக்க முடியாத ஓவியம்?

"நான் பணிபுரிஞ்ச வார இதழ்லேர்ந்து விலகியதும். ஃப்ரீலான்ஸா எல்லா பத்திரிகைகளுக்கும் வரைஞ்சேன் அப்போ குமுதத்துக்கும் நிறைய வரைஞ்சிருக்கேன் குமுதத்துல ஜெயலலிதா எழுதின தொடருக்கு நான் வரைஞ்ச படங்களை ஜெய லலிதாவே பாராட்டினது மறக்க முடியாத விஷயம்!"

திடீர்னு பத்திரிகைகள்ல வரையறதை நிறுத்திட்டீங்க. நீண்ட இடைவெளிக்கு அப்புறம் வெட்டிங் கார்ட்ஸ்ல வரைய ஆரம்பிச்சீங்க, இடைப்பட்ட காலத்துல என்ன ஆச்சு?

ஒரு சமயம், என் மனைவியோட பார்வையைப் பரிசோதிக்கறதுக்காக மருத்துவமனைக்கு கூட்டி கிட்டுப் போனேன். அந்த சமயத்துல என் மனைவி. எதுக்கும் நீங்களும் பரிசோ தனை செய்துக்குங்கன்னு சொன்னாங்க அப்போதான் நடந்துச்சு அந்த விபரீதம் என்கண்களைப் பரிசோதிச்ச டாக்டர்கள் கண்ணுல ஏதோ பிரச்னை இருக்கறதாகவும், உற்றுப் பார்த்துப் படம் வரையறதை நான் உடனடியா நிறுத்தலைன்னா, ஆறே மாதத்துல என் பார்வை முழுமையா பறிபோயிடும்னும் சொல்லிட்டாங்க அவ்வளவுதான், மனைவி, மகன் மகள்கள் மருமகள் பேரன்னு என் குடும்பமே பதறிட்டாங்க நான் எவ்வளவோ சொல்லியும் என்னை வரைய கூடாதுன்னுதடுத்துட்டாங்க வேற வழியில்லாம எல்லா பத்திரிகைகளுக்கும் என் ல் கண் பிரச்னையையும், இனிமே நான் படம் வரைய மாட்டேன்னும் விளக்கமா கடிதம் எழுதிட்டேன் அதனால எனக்குப் படம் வரையும் வாய்ப்புகள் அதன் பிறகு வரலை


கிட்டத்தட்ட பத்துவருஷம் எப்படியோ வரையாம இருந்துட்டேன். ஆனா அதுக்கு மேல - முடியலை. அதனால், என்னால சும்மா இருக்க கல்யாணப் பத்திரிகைகளுக்கு டிசைனிங்காவது பண்ணலாம்னு நினைச்சேன் அப்படி என் 72 வயசுல தொடங்கினதுதான். மாயா வெட்டிங் கார்ட்ஸ் அதுலயும் எத்தனையோ வித்தியாசமான அனுபவங்கள்

அதில் ஏதாவது சுவாரஸ்யமான சம்பவங்களை சொல்லுங்களேன்?

வெட்டிங்
கார்டு ஓர்க் ஆரம்பிச்சதும்
பலரும் தங்களோட திருமணத்துக்கான அழைப்பிதழ்ல எந்த மாதிரி படம் வேணும்னு சொல்லி வரைஞ்சுதரச் சொல்வாங்க.அப்படித் தன் அப்பாவோட வந்த ஒரு பொண்ணு, ஒரு பல்லக்குல வந்து இறங்கற தன்னை. குதிரைல தயாரா காத்துகிட்டு இருக்கற மணமகன் கரம்பிடிச்சு கூட்டிக்கிட்டுப் போகற மாதிரி படம் வேணும்னு கேட்டாள். நான் அதை வரைஞ்சு வைச்சுட்டேன். ஆனா, பதினைஞ்சு வருஷம் ஆச்சு, இன்னும் அவள் வந்து அதை வாங்கிட்டுப் போகவே இல்லை. (சிரித்தபடியே அந்த ஓவியத்தைக் காட்டுகிறார், மாயா)

என் நண்பர் போயிருந்த ஒரு கல்யாணத்துல வெட்டிங் கார்டுல, காசியாத்திரை, மாலை மாத்திக்கறது, ஊஞ்சல், இப்படி நான் வரைஞ்சிருந்த சம்பிரதாயங்கள் எல்லாம் வரிசையா நடத்தப்படுதான்னு சரிபார்த்து ஒருத்தர் டிக் பண்ணிகிட்டு இருந்ததை ஆச்சரியமா பார்த்துட்டு வந்து என்கிட்டே சொன்னார். வெட்டிங் கார்டை வாங்க வர்றவங்க.
என்னையும் என் மனைவியையும் நமஸ்காரம் செய்துட்டு வாங்கிட்டுப் போனதெல்லாம். நெகிழ்வான விஷயம்! அதுக்கப்புறம் 2021 ல கொரோனா வந்த சமயத்துல வெட்டிங் கார்ட் ஓர்க்கை நிறுத்திட்டு, அது சார்ந்த எல்லாத்தையும் உறுதுணையா இருந்த ஓர்க்கர்ஸுக்கே கொடுத்துட்டேன்"

உங்க மனைவியைப் பற்றி...

"எனக்கு இருபது வயசுல கல்யாணம் ஆச்சு. இந்த வயசு வரைக் கும் நான் தெம்பா இருக்கேன்னா, அதுக்கு என் மனைவி ராஜலக்ஷ்மி கொடுத்த ஊக்கமும் உணர்வும்கூட ஒரு காரணம் இன்றைக்கு இருக்கற ஸ்ப்ரே கன் மாதிரியான உபகரணங்கள் இல்லாத அந்தக் காலத்துலயே நான் ஸ்ப்ரே பெயிண்டிங் எல்லாம் வரைஞ் சிருக்கேன்னா அது, அவள் செய்த உதவிதான் ஆமாம் காற்றை ப்ளோ பண்ண கம்ப்ரஸர் எல்லாம் அப்போ கிடையாது துருத்தி மாதிரி ஒரு பம்பை காலால் தொடர்ந்து அழுத்தணும். நான் வரைஞ்சு முடிக்கற வரைக்கும் என் மனைவிதான் அந்தப் பம்பை காலால் மிதிச்சு இயக்குவாள். எனக்கு ஒரு மகன், மூணு மகள்கள். அவங்களை எல்லாம் வளர்த்தது, படிக்க வைச்சது எல்லாமே அவள்தான் என்கிட்டே எதுவுமே கேட் டறியாத அவளுக்காக நான் செய்தது ஒண்ணே ஒண்ணு தான் அவளுக்குப் பிரியமான பாடகர் ஜேசுதாஸை ஓவியமா வரைஞ்சு, அவளோட அவரைப் பார்க்கப்போனதும். அந்த ஓவியத்துல அவர் கையெழுத்தை வாங்கிக் கொடுத்ததும்தான்.

20 வருடங்களுக்கு முன்னால் அவளை இழந் தது எனக்குப் பெரும் சோகம். ஆனாலும் மகன். மருமகள், பேரன், கொள்ளுப் பேரன்கள்னு எல்லாரும் என்மேல காட்டற அன் பாலும் பாசத்தாலும் இந்த வயசுலயும் நான் தெம்பாகவே இருக்கேன். 2010ல வந்த வெள்ளம் வீட்டுக்குள்ளே புகுந்ததுல என்னோட ஓவியங்கள் எல்லாம் சேதமடைஞ்சுடுச்சு. ஆனா, அதுக்காக நான் வருத்தப்படலை. ஏன்னா, ஆண்டவன் அனுகிரஹத்துல இப்போ வரைக்கும் என் பார்வையும் நல்லாவே இருக்கு. நானும் வரையறதுக்குத் தயாராகவே இருக்கேன்!”

நன்றி குமுதம் தீராநதி 
மே 2023

Saturday, 8 November 2025

சினிமா டிசைனர் குமார்

திரைப்படங்களில் சுவரொட்டி மற்றும் டைட்டிலில் டிசைன் செய்வது என்பது ஒரு  கலை .

90 கோளில் நான் வியந்த திரைப்பட போஸ்டர்கள் குமார் அவர்களின் கைவண்ணமே...

அதுவும் திரைப்படத்தின் சுவரொட்டி தயாரிப்பது ஆகச்சிறந்த கலை.
 ஜனங்களை ஈர்க்கும் வகையில் அந்த திரைப்படத்தை பார்க்கும் வகையில் அந்த சுவரொட்டி அமைய வேண்டும் இதை 40 ஆண்டு காலமாக வடிவமைத்தவர் திரு குமார் என்பவர்.

 கமலஹாசனின் நடித்த திரைப்படங்கள் பாரதிராஜா பாலச்சந்தர் ரஜினிகாந்த் மணிரத்தினம் உட்பட அனைத்து திரைப்பட விஷயங்களும் கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு மேல் சுவரொட்டி தயாரித்தவர் திரு.குமார்.

 அவரின் காணொளி இரண்டு மட்டும் கிடைக்கிறது அதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

https://youtu.be/xNJ9vihG9Ek?si=Bf5-wfR4V6MLA8Cj

https://youtu.be/gDwWu6KKCcM?si=zg2n2SS8USEfNBEd



Saturday, 14 June 2025

ஓவிய பயிற்சி

இன்று கடையநல்லூர் பெஸ்ட் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஓவியம் மூலம் கற்றல் கற்பித்தல் பயிற்சி வழங்கினேன்.32 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றார்கள் 

14-6-2025
கடையநல்லூர்