Monday, 25 November 2019







  

சி.சு செல்லப்பா
1912-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்தவர். சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா என்பதன் சுருக்கமே சி.சு.செல்லப்பா.

தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கியமான ஆளுமை சி.சு.செல்லப்பா.
வத்தலகுண்டில் பள்ளிப்படிப்பையும், மதுரையில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட செல்லப்பா சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றார்.

அந்த சூழலில்தான் இலக்கியத்திலும் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. சுதந்திர சங்கு என்ற பத்திரிகையில் விடுதலை தொடர்பான கட்டுரைகளை எழுத துவங்கினார். மெல்ல மெல்ல மணிக்கொடி இதழின் மூலம் தீவிர இலக்கியத்திற்குள் ஈடுபடலானார். 1937-ல் சென்னைக்கு இடம்பெயர்ந்த அவர் 1947 முதல் 1953 வரை தினமணி கதிரில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். ஒருபுறம் பத்திரிகை துறையிலும் மறுபுறம் எழுத்துப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அவரது புகழ்பெற்ற குறுநாவலான வாடிவாசல் 1947-ல் எழுதப்பட்டது. ஜல்லிக்கட்டை களமாக கொண்டது. வெறும் 70 பக்கங்கள் மட்டும் கொண்ட வாடிவாசல், இன்றளவும் தமிழ் இலக்கியத்தின் உச்ச நாவல்களில் ஒன்றாக விளங்குகிறது.

நாவலில் சிறந்த உவமைகளை செல்லப்பா கையாண்டு இருப்பார்.

உலக இலக்கியத்தில் ஹெமிங்வே எழுதிய கிழவனும், கடலும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையோ அதற்கு இணையாக தமிழில் கொண்டாடப்படும் கதையாக வாடிவாசல் திகழ்கிறது.

சி.சு.செல்லப்பா என்றதும் நினைவுக்கு வருவது அவர் ஆசிரியராக இருந்து நடத்திய எழுத்து சிற்றிதழ் தான்.

இன்றும் சிற்றிதழ்களின் முன்னோடியாக எழுத்து சிற்றிதழ்
உள்ளது. அட்டைப்படத்திலேயே பொருளடக்கம் துவங்கி விடும். தீவிர இலக்கியம் மட்டுமே அதன் பேசுபொருள்.

ஏராளமான இளம் எழுத்தாளர்களை அவர் எழுத்து சிற்றிதழ் வாயிலாக அறிமுகப்படுத்தியுள்ளார். வெங்கட் சாமிநாதன், பிரமிள், நா.முத்துசாமி போன்றவர்கள் அவரால் ஊக்கம்பெற்றவர்கள்

சரஸாவின் பொம்மை, மணல் வீடு போன்ற சிறுகதை தொகுதிகளும், ஜீவனாம்சம், சுதந்திர தாகம் போன்ற நாவல்களையும், முறைப்பெண் என்ற நாடகத்தையும், மாற்று இதயம் என்ற கவிதை தொகுதியையும், இன்று நீ இருந்தால் என்ற குறுங்காப்பியத்தையும் அவர் எழுதினார். எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்து சிற்றிதழ் அவரது ஆகச்சிறந்த பங்களிப்பு ஆகும்.

1998-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி காலமானார் சி.சு.செல்லப்பா. அவரது மறைவுக்குப் பிறகு 2001-ம் ஆண்டு சி.சு.செல்லப்பா எழுதிய சுதந்திர தாகம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment