தினம் ஒரு கரைசல் - ஆர்கியபாக்டீரியல் கரைசல்...!
ஆர்கியபாக்டீரியல் கரைசல்..!
பயிர்களுக்கு பொதுவாக மாட்டுச்சாணம் அளிப்பது மிகவும் சிறந்தது ஆகும். மாட்டுச்சாணம் மண்ணில் நுண்ணுயிரிகளை அதிகப்படுத்தி, பயிர்களின் வேர்களை மண்ணிற்குள் எளிதாக செல்ல வழிவகுக்கின்றன.
இந்த மாட்டுச்சாணத்தை அப்படியே பயிர்களுக்கு அளிக்காமல், கரைசலாக தயாரித்து பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கரைசல் தயாரிக்கும் முறை பற்றி இங்கு காண்போம்.
இதற்காக பயிர்களுக்கு ஆர்கியபாக்டீரியல் கரைசல் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கரைசல் தயாரிக்க 20 கிலோ சாணம், 200 லிட்டர் தண்ணீர், 3 கிலோ வெல்லம், 100 கிராம் கடுக்காய் தூள், 10 கிராம் அதிமதுரம் ஆகியவை தேவைப்படும்.
தயாரிக்கும் முறை :
முதலில் ஒரு கொள்கலனை எடுத்துக்கொண்டு, அதில் சாணம், வெல்லம், கடுக்காய் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.
பின்னர் அதிமதுரத்தூளை, 250 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை ஆற வைத்து, முன்னர் தயார் செய்யப்பட்ட கலவையுடன் கலந்து கொள்ள வேண்டும்.
கொள்கலனில் மீதமுள்ள பகுதியை நீர் கொண்டு நிரப்பி, அந்த கலனை காற்றுப்புகாதவாறு மூடி வைக்க வேண்டும். அவ்வப்போது மூடியைத் திறந்து மூட வேண்டும்.
பின்னர் 10 நாட்கள் கழித்து, இந்த கரைசல் பழுப்பு நிறமாக மாறி, ஒருவித வாசனை வீசும். இந்த கரைசலைப் பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
தயார் செய்த ஆர்கியபாக்டீரியல் கரைசல் 1 லிட்டரை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து பயிர்களுக்கு அளிக்கலாம். மேலும் இந்த கரைசலை பஞ்சகாவ்யா, மீன் அமிலம், அரப்பு மோர் கரைசல் உள்ளிட்ட கரைசல்களுடனும் கலந்து பயிர்களுக்கு அளிக்கலாம்.
பயன்கள் :
இந்த கரைசலைப் பயிர்களுக்கு அளிப்பதால் அவற்றின் வளர்ச்சி மேம்பட்டு காணப்படும்.
ஆர்கியபாக்டீரியல் கரைசல் நுண்ணுயிர்களை அதிகரிக்க செய்கின்றன.
இதை பாசன நீரிலும் கலந்து பயிர்களுக்கு அளிக்கலாம்.
இந்த கரைசலைப் பயிர்களுக்கு பயன்படுத்துவதால், அவற்றைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
No comments:
Post a Comment