Monday, 9 February 2026

ஓவியர் ஷ்யாம் கனவு ஆசிரியர் பிப்ரவரி 2026 இதழில் எழுதிய ஓவியம் சார்ந்த கட்டுரை



"ஒவ்வொரு குழந்தையும் ஒரு கலைஞன். 'ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகு அந்தக் கலைஞனாகவே இருப்பது தான் சிக்கல்." இப்படிச் சொன்னவர் உலகின் மகத்தான ஓவியர்களில் ஒருவரான பாப்லோ பிகாசோ.


தன் வாழ்நாளை ஓவியத்திற்காகயே செலவழித்த அவர் சொல்வதால் கலைஞன் எனும் இடத்தில் 'ஓவியர்' எனும் சொல்லை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்.

ஒரு குழந்தை வளர்ந்த பிறகு கலைத்தன்மையோடு இருக்க வேண்டும் எனில் அதற்கு முதன் முயற்சி எடுக்க வேண்டிய நபர் அக்குழந்தையின் ஆசிரியர்

கலை குறித்து ஆசிரியர்கள் ஆர்வத்தோடு தெரிந்துகொள்வது மிகவும் நல்லது. கலையில் என் துறை ஓவியம் எனவே ஓவியம் குறித்து ஆசிரியர்கள் பல்வேறு செய்திகளையும் வரலாற்றையும் தெரிந்துகொள்வது அவசியம்

இந்த உலகின் முதல் மொழி ஓவியம்தான் கற்கால மனிதர்கள் தாங்கள் பார்த்ததை அடுத்த தலைமுறைக்கு ஓவியமாகப் பாறைகளிலும் குகைகளிலும் தீட்டிச் சென்றனர்.

எந்த மொழியும் உருவாவதற்கு முன்பே அவர்களின் வாழ்வியளைக் குறியீடுகளாக அதாவது கோடுகளாகவும் வட்டங்களாகவும் முக்கோணங்களாகவும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். அதனால்தான் உலகின் முதல் மொழி ஓனியம்.

பாடப் புத்தகங்களை ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு முன்பே அவை குழந்தைகளை ஈர்ப்பதற்கு முதன்மையான காரணம் அவற்றில் உள்ள ஒவியங்கள் தான் பலரின் முதல் ஓவியம்கூட பாடப் புத்தகத்தில் உள்ளதைப் பார்த்து வரைந்ததாகவே இருக்கும்.

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்துகிறார். அப்போது ஒரு பகுதியை வார்த்தைகளால் விவரிக்கிறார். அதை மாணவர்கள் தம் கற்பனையில் காட்சியாக உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் தாம் சொல்வது துல்லியமாக மாணவர்களுக்குப் புரிந்துள்ளதா எனும் சிறு தயக்கம் ஆசிரியருக்கு எழுகிறது. உடனே, தான் விவரித்த பகுதியை ஓவியமாகக் கரும்பலகையில் வரைகிறார் அப்போது மாணவரின் கற்பனையில் உருவான காட்சியும் கரும்பலகை ஓவியமும் பொருந்திப் போனால் பாடம் மிகத் துல்லியமாக அவர்கள் மனதில் பதிந்துவிடும் மாறாக மாணவர் மன ஓவியமும் ஆசிரியர் வரைந்த கரும்பலகை ஓவியமும் வேறுபட்டால் மாணவர் தம் மனச்சித்திரத்தைத் திருத்திக்கொள்வர்.

சில ஆசிரியர்கள் அந்த வகுப்போடு அங்கு வரைந்த ஓவியத்தை மறத்துவிடக் கூடும் அப்படி மறந்துவிடாமல் அந்த ஓவியம் மாணவர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் உரையாடும்போதுதான் ஓவியத்திற்கும் கற்றலுக்கும் உள்ள இணக்கம் புரிய வரும்.

ஓர் ஓவியம் என்பது வெறுமனே உருவத்தைக் காட்டுவது மட்டுமல்ல. வரலாறு பாடத்தில் ராஜராஜ சோழன் பற்றி இடம்பெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் இருக்கும் ராஜராஜ சோழனின் ஓவியம், அப்போதைய மனிதத் தோற்றம், ஆபரணங்கள், மாளிகைகளின் வண்ணம், நாற்காலிகளின் வடிவம் என அந்த ஓவியத்தில் கவனிக்க ஏராளம் இருக்கும்.

கணிதம் என்றாலே எண்கள்தானே என்று சிலர் நினைக்கலாம். அப்படியல்ல, கணிதத்திற்கும் ஓவியத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. கணிதத்தில் இடம்பெறும் வட்டமும், கட்டமும் ஓவியத்தின் பகுதிகள்தானே! ஒரு கட்டடத்திற்கான அடித்தளம் போடுவதற்கு முன்பே அது வரையப்படும் அல்லவா! அது ஓர் ஓவியமே. அந்த ஓவியத்தில் உள்ள கட்டடம் நிலைத்திருக்கத் தேவையான அடித்தளக் கணக்கைப் போடுவோம்.

ஓவிய சாஸ்திரப்படி கட்டங்களால் ஆனதே ஓர் ஆணின் உருவம். வட்டங்களால் ஆனதே ஒரு பெண்ணின் உருவம் மனித உருவங்களோ, சிற்பங்களோ செதுக்குவதற்கும் வரைவதற்கும் ஓர் அளவுகோல் உள்ளது. உதாரணத்திற்கு நெற்றியின் அளவு மட்டும் இரண்டு இஞ்ச் என்ற கணக்கில் கொண்டால், மொத்த முகத்தையும் திட்டமிட்டால் சரியான முக அமைப்பைத் தந்துவிடும்.

கணக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியருக்கு இந்த ஓவிய அளவுகள் கூடுதலாகத் தெரிந்து இருந்தால்தான் கற்பித்தலுக்கு இன்னும் உதவியாக இருக்கும்

கட்டமான வீட்டில் அமர்ந்து, கட்டமான மேஜையில், கட்டமான மடிக்கணினியில் வேலை பார்க்கிறோம். அப்போது வட்டமான மூக்குக் கண்ணாடி அணிந்து, வட்டமான காபி குவளையில் தேநீர்க் குடிக்கிறோம். சிறிது நேரம் கழித்து வட்டமான தட்டில் சாப்பிடுகிறோம். இப்படி நாம் காண்பதும் பயன்படுத்துவதும் அனைத்துமே வட்டத்திலும் கட்டத்திலும் அடங்கி விடுகின்றன. இவைகணிதப் பாடத்திற்கு மிக நெருக்கமானவை என்று ஓர் ஆசிரியர் கூறினால், அந்தக் கணித ஆசிரியர் ஓவியக் கண் கொண்டு பார்த்தால், பாடத்தை எளிதாக மாணவருக்குக் கடத்திவிட முடியும்.

அறிவியல் பூர்வமாகவும் வண்ணங்களை நாம் அணுக முடியும். நீல வண்ணத்தில் மட்டுமே 67 வகைகள் உள்ளன. வண்ணங்களையும் வானத்தின் நிற மாற்றங்களையும் மண்ணின் வண்ணங்களையும் வைத்து அறிவியல் ஆசிரியர் சுவையாக அந்த வகுப்பை நடத்திவிட முடியும்.

இப்படி ஒவ்வொரு பாடத்திற்கும் ஓவியத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கிக்கொண்டே போகலாம்.

ஓவியத்தில் ஆர்வம் உள்ள மாணவர்கள், சுற்றியுள்ளவற்றைக் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். ஒருவரின் உடை, கைகளை ஆட்டும் விதம், முகப்பாவனை என அனைத்தையும் துல்லியமாகப் பார்ப்பர். அதேபோலத் தங்கள் உடைகளையும் பழக்கவழக்கங்களையும் நல்லவிதமாக மாற்றி அமைத்துக் கொள்வர்.

ஓவியத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லலாம். சித்தன்னவாசல். தஞ்சாவூர் போன்ற தொன்மை வாய்ந்த இடங்களில் உள்ள ஓவியங்களைக் காணச் செய்யலாம்.

பழங்கால ஓவியங்கள், தாவரங்களையும் மலர்களையும் மற்றும் மரப்பட்டைகளை எண்ணெயில் காய்ச்சிப் பதப்படுத்தியும் வரையப்பட்டிருக்கின்றன. வண்ண வண்ண மலர்களை அரைத்து சூரிய ஒளியில் காயவைத்துப் பொடியாக்கி அவற்றை ஓவியங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படியான செய்திகளை ஆசிரியர் முன்கூட்டியே தெரிந்துகொண்டு சென்றால் மாணவர்களிடம் பகிர உதவியாக இருக்கும்.



ஓவியங்களின் துணைக்கொண்டு கற்பிக்கும்போது கற்றலும் எளிமையாக இருக்கும்.

No comments:

Post a Comment